தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நரேனை பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
2013 முதல் 2016 வரை தேசிய பங்குச்சந்தையில் நிர்வாக இயக்குநராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா மீது செபி பல்வேறு புகார்களை முன்வைத்தது. பங்குச்சந்தையின் ரகசியங்களை சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை சாமியாருடன் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்துவருகிறது.
இதனைத் தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ஆனந்த் சுப்பிரமணியத்தை கைது செய்தது. பங்குச்சந்தை முறைகேட்டிற்காக இருவருக்கும் தலா ரூ. 5 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், ஜாமீன் கிடைக்காததால் அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பங்குச் சந்தை ஊழியர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதற்காக சித்ரா ராமகிருஷ்ணா மீதும் மும்பையின் முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே மற்றும் ரவி நரேன் ஆகியோர் மீதும் அமலாக்கத்துறை புதிதாக வழக்குகளைப் பதிவு செய்தது. இது குறித்து சிறையில் இருக்கும் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நரேனிடமும் விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அவரையும் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரவி நரேன் 1994 முதல் 2013 வரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.