புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி எளிமையாக மக்களோடு மக்களாக பழகி வருவதால், அவரது ஆதரவாளர்களால் ‘மக்கள் முதல்வர்’ என அழைக்கின்றனர். பொதுமக்கள் எப்போதும் சந்திக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பின்றி பைக்கில் செல்வது, சாலையோர கடைகளில் அமர்ந்து டீ குடிப்பது என தனித்துவமாக முதல்வர் ரங்கசாமி இருந்து வருகிறார். அதோடு, கடினமான அரசியல், அலுவலக பணிகளுக்கு இடையிலும், காலை, மாலை இருவேளையும் உடற்பயிற்சி செய்வது, டென்னிஸ் விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
பொதுவாகவே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு விளையாட்டுகள் மீது அதிக ஆர்வம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அதன் காரணமாகவே தினசரி காலை, மாலையில் டென்னிஸ் விளையாடுகிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், புதுச்சேரி அடுத்த ஆரோவில் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்தார். அதோடு, கிரிக்கெட் ஆடியும் மகிழ்ந்தார்.
புதுச்சேரி முதலமைச்சரே களத்தில் இறங்கி கிரிக்கெட் விளையாடியதைப் பார்த்த பொதுமக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். இதையடுத்து, கிரிக்கெட் வீரர்கள் நலமுடன் இருப்பதற்குப் பூஜை செய்த முதலமைச்சர் ரங்கசாமி, அனைவருக்கும் நெற்றியில் விபூதி பூசி ஆசிர்வதித்தார். அவரிடம் அங்கிருந்தவர்கள் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். தற்போது, இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், புதிய மைதானத்தை திறந்து வைத்த முதல்வர் ரங்கசாமி, பந்து வீச கூறி கிரிக்கெட் விளையாடுகிறார். ஓரிரு பந்துகளை பவுண்டரி லைனுக்கு அனுப்பிய முதல்வர் ரங்கசாமி, விளையாட்டு வீரர்களை ஆசீர்வதித்துப் புறப்பட்டார். தற்போது, இந்த வீடியோ காட்சிகளானது சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. பலரும் முதல்வர் ரங்கசாமி கிரிக்கெட் விளையாடியதை பாராட்டி வருகின்றனர். இந்த வயதிலும் டென்னிஸ், தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வரும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உடற்பயிற்சியில் வளரும் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருப்பதாகக் கூறி வருகின்றனர்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியை அடுத்துள்ள ஆரோவில் பகுதியில் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் வருகிறது.