ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35A ரத்து, மற்றும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களை உருவாக்குவது, காஷ்மீர் மாநிலத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புக்களை மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வெளியிட்டது. மேலும் அதற்கான மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசின் காஷ்மீர் மாநில தொடர்பான அறிவிப்புக்கு முன் காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவப்படைகள் குவிக்கப்பட்டனர். அதே போல் ஸ்ரீநகர், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டதால், பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு- காஷ்மீர் மாநிலம் முழுவதும் நிலவி வரும் பதற்ற சூழலை தணிக்கும் வகையில், காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால், அம்மாநில தலைமை செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து ஆளுநர் மற்றும் தலைமை செயலாளர் இருவரும் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். அதில் நாளை ஆகஸ்ட் 9- ஆம் தேதி முதல் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், அனைத்து கல்வி நிறுவனங்களும் நாளை முதல் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் காஷ்மீர் மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் துணை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே ஊழியர்கள் அச்சமின்றி அலுவலகங்களுக்கு வந்து பணிப்புரியலாம் என தெரிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கையால், காஷ்மீர் மாநிலம் மிக விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராணுவ வீரர்கள் உஷார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.