புதுச்சேரி மாநிலத்தின் 15 ஆவது சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தது.
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த மே மாதம் 7- ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தற்காலிக சபாநாயகர் லக்ஷ்மிநாராயணன், மே 26- ஆம் தேதி அன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனாலும், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகியும் அமைச்சரவைப் பதவியேற்கவில்லை. மேலும் சபாநாயகர் தேர்தலும் நடைபெறவில்லை.
இதனிடையே சபாநாயகர் தேர்வு, அமைச்சர் பதவி குறித்து என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே நடந்த பேச்சுவார்த்தை இழுபறியில் நீட்டித்த நிலையில், சபாநாயகர், இரு அமைச்சர்கள் பதவியை பா.ஜ.க.வுக்கு தர என்.ஆர்.காங்கிரஸ் முன் வந்ததால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இதற்கான பட்டியலுக்கு பா.ஜ.க. மேலிடம் ஒப்புதல் தந்தது. அதைத் தொடர்ந்து, அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை முதலமைச்சர் ரங்கசாமியிடம் பா.ஜ.க. நிர்வாகிகள் வழங்கினர்.
இந்நிலையில் சபாநாயகர் தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று (12/06/2021) வெளியானது. புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், "புதுச்சேரி 15 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் ஜூன் 16- ஆம் தேதி காலை 09.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் கூட்ட துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
அன்றைய தினமே சபாநாயகர் தேர்தல் நடத்தவும் அனுமதி தந்துள்ளார். தேர்தல் நியமன சீட்டுகளை பேரவைச் செயலரிடம் பெறலாம். நியமன சீட்டுகளை அளிப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக அனுப்பியுள்ளோம். அலுவல் நடத்தை விதிப்படி நியமனச் சீட்டுகளை வரும் ஜூன் 15- ஆம் தேதி நண்பகல் 12.00 மணி வரை தரலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட இழுபறிக்குப் பிறகு சபாநாயகர் தேர்வும், அமைச்சர்கள் தேர்வும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டவுடன் அமைச்சரவை பொறுப்பேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.