புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக இன்று (22/02/2021) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி இன்று (22/02/2021) மாலை 05.00 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார். மேலும், சட்டப்பேரவை நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்காக புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (22/02/2021) காலை 10.00 மணிக்கு கூடுகிறது.
தற்போது, புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆகவும், நியமன எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் என எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பலம் 14 ஆகவும் உள்ளது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முதல்வர் நாராயணசாமி அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே, இன்னும் சில மாதங்களில் புதுச்சேரிக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பேரவையில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால், முதல்வர் நாராயணசாமி தனது தலைமையிலான அரசைக் கலைத்துவிட்டு, நேரடியாக சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.