Skip to main content

கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டிக்கு பொதுமக்கள் அஞ்சலி

Published on 19/07/2023 | Edited on 19/07/2023

 

Public Tribute to Former Kerala Chief Minister Oommen Chandy

 

கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி (வயது 80) உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் நேற்று அதிகாலை 4.25 மணியளவில் காலமானார். உம்மன் சாண்டி மறைவைத் தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கேரளா மாநிலம் முழுவதும் நேற்று ஒருநாள் பொது விடுமுறை அறிவித்து கேரள மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது.

 

கேரள மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான உம்மன் சாண்டி கடந்த 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை என இருமுறை கேரள மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். கேரளாவில் உள்ள கோட்டையம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் 1970 முதல் 2021 வரை காங்கிரஸ் கட்சி சார்பாக 12 முறை வெற்றி பெற்று தொடர்ந்து 52 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 52 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆவார்.

 

பெங்களூருவில் நேற்று வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் உம்மன் சாண்டி உடலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.  மேலும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

 

Public Tribute to Former Kerala Chief Minister Oommen Chandy

 

இந்நிலையில் பெங்களூருவில் இருந்து உம்மன் சாண்டி உடல் கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உடல் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான புதுப்பள்ளிக்கு உடல் சாலை வழியே கொண்டு செல்லப்படுகிறது. இதையொட்டி  உம்மன் சாண்டியின் உடலுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை உம்மன் சாண்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்