அசாம் மாநிலம் கவுகாத்திக்கு பிரதமர் மோடி நேற்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் பயணம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, அந்த மாநில மாணவர் சங்கத்தினர் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். கவுகாத்தி விமான நிலையத்திலிருந்து, ராஜ்பவன் நோக்கி பிரதமரின் வாகனம் சென்றபோது, கவுகாத்தி பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் ஒன்று திரண்ட மாணவர் சங்கத்தினர், அவரது வாகனத்திற்கு எதிரே கருப்பு கொடிகளை காட்டி போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து எம்.ஜி. சாலை பகுதியிலும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் பாஜக சார்பில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இப்போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது, பிரதமர் மோடி திரும்பிச் செல்ல வேண்டும், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. பிரதமரின் வாகனத்திற்கு அருகில் மாணவர்கள் கறுப்புக்கொடி காட்டிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.