ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பல வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில்,மத்தியப் பிரதேசம், மாண்ட்லா நகரில் பா.ஜ.கவின் ஜன ஆசீர்வாத யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அதன் பின்பு அந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஊழல் நிறைந்த ஆட்சியில் பயங்கரவாதிகள் நிறைய அட்டூழியங்கள் செய்தார்கள். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நம் நாட்டு ராணுவ வீரர்களின் தலைகளை துண்டித்தார்கள். புல்வாமா தாக்குதல் கூட நடத்தி பல ராணுவ வீரர்களை நம்மிடம் இருந்து பிரித்தார்கள். அப்போது அவர்கள், மன்மோகன் சிங் ஆட்சி நடக்கிறது என்பதை நினைத்துக் கொண்டு அப்படி ஒரு பயங்கரவாத சதியை ஏற்படுத்தினார்கள்.
புல்வாமா தாக்குதல்; “யாரிடமும் சொல்லக்கூடாது” என்ற பிரதமர்; வெளியான அதிர்ச்சி தகவல்
ஆனால், புல்வாமா தாக்குதல் நடந்த உடனே பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்திய எல்லையையும், இந்திய வீரர்களையும் தொடக்கூடாது என எதிரிகளுக்கு செய்திகள் அனுப்பப்பட்டது. சிறுபான்மையினர்களைத் திருப்திப்படுத்தும் கொள்கையையே மன்மோகன் சிங் ஆட்சியில் பின்பற்றினார். பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தான் பொருளாதாரத்தில் இந்தியா உலகில் 11வது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது இந்தியா பொருளாதாரத்தில் 5வது இடத்தில் இருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில், பழங்குடியின சமூகத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஆண்டுக்கு வெறும் ரூ. 24 ஆயிரம் கோடி தான் இருந்தது. காங்கிரஸ் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதும் பழங்குடியினத்திலிருந்து எந்தவொரு நபரையும் ஜனாதிபதி ஆக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடி நாட்டின் பிரதமர் ஆனதும் ஏழைகள் மற்றும் பழங்குடியின சமூகத்தின் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். ஒவ்வொரு பிரிவினருக்கும் பாதுகாப்பை பா.ஜ.க வழங்கி வருகிறது. மத்தியப் பிரதேசத்தை ஊழல் மிகுந்த மாநிலமாக காங்கிரஸ் மாற்றி வைத்து இருக்கிறது. திக்விஜய் சிங், கமல்நாத் ஆட்சியில் இந்த நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது” என்று கூறினார்.