2022-ல் புதிய இந்தியாவை உருவாக்க உறுதிகொள்ளுங்கள்: பிரதமர் மோடி
வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தப் போராட்டங்களின் 75 ஆண்டுகால நினைவுகளையொட்டி, பிரதமர் மோடி நாடு முழுவதும் பரவிக்கிடக்கும் இனவாதம், சாதியம், ஊழல் போன்றவற்றை ஒழித்து 2022-ஆம் ஆண்டில் புதிய இந்தியாவை உருவாக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி அடுத்தடுத்து வெளியிட்ட பதிவுகளில், ‘மகாத்மா காந்தி தலைமையிலான வரலாற்றுப் பெருமைமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை, நாம் அனைவரும் ஒரு உத்வேகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிரிட்டிஷ்காரர்களின் காலணி ஆதிக்க ஆட்சியை முறியடித்து, அவர்களை வெளியேற்றுவதற்காக மகாத்மா காந்தி தலைமையில் ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டனர். அவர்களது நோக்கம் சுதந்திரத்தை மட்டுமே எண்ணியதாக இருந்தது. அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.
அந்த இயக்கம் நடைபெற்று 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்போது நிலைமை வேறாக உள்ளது. நம் நாடு வறுமை, சுத்தமின்மை, ஊழல், இனவாதம் மற்றும் சாதியம் போன்றவற்றால் பின்தங்கியிருக்கிறது. இவற்றிலிருந்து நம் நாட்டை விடுபடச் செய்து, 2022-ல் புதிய இந்தியா உருவாவதற்கு நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.
இந்த உறுதிமொழியை நிறைவேற்ற மக்கள் அனைவரும் தோளோடு தோளாக இணைந்து பாடுபட வேண்டும். அந்த உழைப்பால் நம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெருமை கொள்ளவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்