தெலங்கானாவில் பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா (26) மாதப்பூர் கால்நடை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை வழக்கம்போல் பணிக்கு சென்ற பிரியங்கா, இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, காணாமல் போயுள்ளார். இறுதியாக அவரது சகோதரிக்கு போன் மூலம் தொடர்பு கொண்ட அவர், தன்னை யாரோ முறைத்து பார்ப்பதாகவும், பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அதன் பின் அவரது போனை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனையடுத்து அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், ரங்காரெட்டி மாவட்டம் சட்டப்பள்ளி பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண், எரிந்த நிலையில் சடலமாக இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், எரிந்த நிலையில் சடலமாக கிடந்த பெண், பிரியங்காதான் என்பதை உறுதி செய்தனர். பெண் மருத்துவர் எரித்துக்கொல்லப்பட்ட இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள்தான் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சைபராபாத் காவல் ஆணையர், "வழக்கமாக சின்ஷபள்ளியில் உள்ள சுங்கச்சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பொதுப் போக்குவரத்து மூலமாக மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார் பிரியங்கா. சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல தனது வண்டியை நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார். அப்போதிலிருந்து வண்டியை நோட்டமிட்ட முகமது பாஷாவின் கும்பல் அவரது வண்டியை பஞ்சர் செய்துள்ளது. பின்னர் பணி முடிந்து திரும்பிய ப்ரியங்காவிடம் வாகனத்தை சரிசெய்து தருவதாக கூறி அவரை இழுத்து சென்றுள்ளது. போதையில் இருந்த அந்த கும்பல் பிரியங்காவை ஆள் இல்லாத இடத்திற்கு தூக்கிச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது. பின்னர் ப்ரியங்காவின் உடலை தார்பாயில் சுற்றி லாரியில் போட்டு எடுத்துச் கொண்டு கட்டபள்ளி என்ற இடத்தில் உள்ள பாலத்தின் அடியில் வைத்து எரித்துள்ளது" என தெரிவித்தார். சிசிடிவி காட்சியின் அடிப்படையில், இந்த நால்வரும் தான் குற்றத்தில் ஈடுபட்டதாக சைபராபாத் காவல்துறை உறுதி செய்திருக்கிறது.