பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2020-2021 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சமுதாயத்தின் மீது அக்கறை செலுத்துதல் ஆகிய மூன்று நோக்கங்களின் அடிப்படையில் இந்த பட்ஜெட் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அரசுக்கு வருவாய் ஈட்டும் பொருட்டு சில பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கான முடிவுகள் குறித்தும் இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி இந்த பட்ஜெட்டில் ஏர் இந்தியாவைத் தொடர்ந்து, எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இது விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. அதேபோல், நீண்ட காலமாக விவாதத்தில் இருக்கும் ஐ.டி.பி.ஐ. வங்கியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவு பற்றியும் நிதியமைச்சர் பேசியிருக்கிறார். மருத்துவத்துறையிலும் தனியார் மயத்திற்கு முக்கியத்துவம் தரப்படும் அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. அதேபோல விவசாய பொருட்களை கொண்டு செல்ல தொடங்கப்படுவதாக கூறப்படும் ரயில் சேவையும் தனியார் நிறுவனத்துடனான கூட்டு முயற்சியிலேயே தொடங்கப்படுகிறது.
இந்நிலையில், பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்து, அதன்மூலம் 2.1 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இப்படிப்பட்ட பொருளாதார செயல்பாடுகளின் மூலம், 2021-ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அரசின் மொத்த செலவு 30 லட்சம் கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை மூன்றரை சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.