பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) பிற்பகல் நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.
அந்த வகையில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு, முதன்முறையாகத் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தது. அதில், மேற்கு வங்க மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக பொறுப்பு வகித்து வந்த ராஜீவ் குமாரை நீக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி கூறுகையில், “ராஜீவ் குமார் (டி.ஜி.பி.) ஆட்சியில் இருக்கும் கட்சியின் (திரிணாமுல் காங்கிரஸ்) குறிப்பாக அரசின் முகமாக இருந்தார். அரசின் உத்தரவின்றி அவர் பணிபுரிய மாட்டார் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள, டி.ஜி.பி.யாக இருந்தும் மக்களின் குறைகளை கேட்காததால், பல புகார்களை பதிவு செய்துள்ளோம். இது நல்ல முடிவு. இது எங்களுக்கு மகிழ்ச்சி” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரியான விவேக் சஹாய் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில உள்துறை செயலாளர்களையும் மாற்ற உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.