இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று (22.04.2021) ஒரேநாளில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கரோனா உறுதியானது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 263 பேர் உயிரிழந்தனர். மேலும், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக கூறியுள்ளன. டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை பற்றி தெரிவிப்பதும், ஆக்ஸிஜன் முழுவதுமாக தீர்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், புதிய நோயாளிகளை அனுமதிக்க மறுத்து வருகின்றன.
இந்நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை தொடர்பாக ராகுல் காந்தி, மத்திய அரசை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "கரோனாவால் ஆக்ஸிஜன் அளவைக் குறைக்க முடியும். ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும், ஐ.சி.யு படுக்கைகள் தட்டுப்பாடும் அதிக இறப்புகளை ஏற்படுத்தலாம். இந்திய அரசே இது உங்களைப் பற்றியதுதான்" என தெரிவித்துள்ளார்.
கரோனா அதிகமுள்ள மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தும் பிரதமர் மோடி, அடுத்ததாக நாட்டிலுள்ள ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.