கடந்த வாரத்தில் நாட்டிலேயே அதிகமாகப் பார்க்கப்பட்ட (Impressions) தொலைக்காட்சி சேனலாக தூர்தர்ஷன் சேனல் மாறியுள்ளதாகத் தொலைக்காட்சி பார்வையாளர் ஆய்வு அமைப்பு (பிஏஆர்சி) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் 5700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 166 பேர் உயிரிழந்துள்ளனர், 473 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளதால், அவர்களின் பொழுதுபோக்கிற்காகப் பழைய இதிகாச தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப முடிவெடுத்தது தூர்தர்ஷன் சேனல். அந்த வகையில் மார்ச் மாதத்தின் கடைசி வாரத்திலிருந்து ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
மேலும், மஹாபாரதம், சக்திமான், புனியாத் ஆகிய தொடர்களும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தூர்தர்ஷன் சேனலின் பார்வையாளர்களின் எண்ணிக்கை கடத்த ஒரு வாரத்தில் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த தொடர்களை மக்கள் ஆர்வத்துடன் பார்த்ததால், பார்வையாளர்கள் சதவீதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு 40 ஆயிரம் சதவீத வளர்ச்சியை தூர்தர்ஷன் சேனல் பெற்றுள்ளதாகத் தொலைக்காட்சி பார்வையாளர் ஆய்வு அமைப்பு (பிஏஆர்சி) தெரிவித்துள்ளது.
அதேபோல தனியார் சேனல்களின் பார்வையாளர்கள் சதவீதமும் இந்தியாவில் பெருமளவு அதிகரித்துள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தனியார் சேனல்களின் வருகையால் நீண்ட காலமாக பார்வையாளர்கள் எண்ணிக்கையில் பின்தங்கியிருந்த தூர்தர்ஷன் கடந்த ஒருவாரத்தில் லட்சக்கணக்கிலான பார்வையாளர்களைப் பெற்று தனியார் சேனல்களை வாய்ப்பிளக்கவைத்துள்ளது.
மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அனைத்து மக்களும் இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் விளக்கை அணைத்து தீபம் ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக்கொண்டார். அந்த 9 நிமிடங்கள்தான் நாட்டிலேயே மிகக்குறைவான பார்வையாளர்கள் தொலைக்காட்சியை பார்த்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டுக்குப் பின் குறைந்த அளவு பார்வையாளர்களை இந்தியத் தொலைக்காட்சி சேனல்கள் பெற்றது அன்றுதான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.