மேகாலயாவில் வரும் 27 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 60 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்டது மேகாலயா சட்டமன்றம். இதில், 2018 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களை பிடித்தது. என்றபோதும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை அமைக்க முடியவில்லை.
அந்த தேர்தலில் தேசிய மக்கள் கட்சி 20 தொகுதிகளில் வென்றது. வலுவான கூட்டணி அமைத்ததால் அக்கட்சி ஆட்சியில் அமர்ந்தது. இந்த தேர்தலில் பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தாலும் கூட தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி கட்சியாக இருந்தாலும் பாஜகவுக்கும் முதல்வருக்கும் மோதல் போக்கு நீடித்ததால் இந்த தேர்தலில் பாஜக தனித்து களமிறங்குகிறது. இந்நிலையில் பாஜகவிற்காக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்.
இந்நிலையில் தற்போது மேகாலயாவில் பாஜகவிற்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில் அந்த பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் துராவில் உள்ள பி.ஏ.சங்மா விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் பி.ஏ.சங்மா அரங்கில் பணிகள் நடைபெறுவதை காரணம் காட்டி பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சி நடைபெறும் மேகாலயாவில் மோடியின் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக அம்மாநில அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறுகின்றனர்.