கரோனா காலத்தில் 7-வது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
டெல்லியில் இருந்து காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது; "ஊரடங்கு காலம் முடிந்து வீட்டை விட்டு வெளியே வரத் தொடங்கியுள்ளோம். பொருளாதாரம் படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. கரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக போகவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.
அமெரிக்கா, பிரேசிலில் கரோனா பாதிப்பு இன்னும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. பல நாடுகளில் கரோனா முடிவுக்கு வந்துவிட்டது என நினைத்த நேரத்தில் அது மேலும் அதிகமாக பரவியது. இந்தியாவில் பெருமளவில் கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. உலக அளவில் மற்ற நாடுகளை விட கரோனாவால் இந்தியாவில் இறப்பு விகிதம் மிகக்குறைவு. கரோனா சிகிச்சைக்கு நம்நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை. நாடு முழுவதும் கரோனா பரிசோதனைக்கு 2,000 ஆய்வகங்களும், சிகிச்சைக்கு பல லட்சம் மையங்களும் உள்ளன.
இந்தியா மேற்கொண்ட அதிகளவிலான பரிசோதனை இந்த போரில் முக்கிய ஆயுதமாக இருந்தது. கரோனா காலத்தில் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் மக்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. மக்கள் சிலர் முகக்கவசமின்றி வெளியே வருகின்றனர். முகக்கவசமின்றி வெளியே வருவதால் உங்கள் உயிர் மட்டுமின்றி குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து. கரோனா தொற்று இனிமேல் இல்லை என எண்ணி அஜாக்கிரதையாக இருந்து விட வேண்டாம்.
கரோனாவுக்கான தடுப்பூசி வரும் வரை நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது. மருந்து கிடைக்கும் வரை கரோனாவுக்கான முன்னெச்சரிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும். நோய், நெருப்பு போன்றவற்றை நாம் எப்போதுமே எளிதானதாக கருதக்கூடாது. மனிதனைக் காப்பாற்ற உலகளவில் போர் போன்ற கடும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனாவை வேரோடு வீழ்த்தும் வரை அதற்கெதிரான இந்தியர்களின் போராட்டம் முடிவடையாது.
கரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல், அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பண்டிகை காலங்களில் இன்னும் கூடுதல் கவனமாக மக்கள் இருக்க வேண்டும். தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிவதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். தசரா, ஈத், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வரிசையாக பண்டிகைகள் வருகின்றன. பாதுகாப்புடன் கொண்டாட வாழ்த்துகள். தனிநபர் இடைவெளி, முகக்கவசம், கைகழுவுதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்து பண்டிகைகளை கொண்டாடுங்கள்" இவ்வாறு பிரதமர் கூறினார்.