மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நியமன உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (08/07/2022) சந்திக்கிறார்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று நான்கு மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாகத் தேர்வு செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இசையமைப்பாளர் இளையராஜா, பி.டி.உஷா, கே.வி.விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நியமன உறுப்பினர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள இல்லத்தில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நியமன உறுப்பினர்களான இளையராஜா, பி.டி.உஷா, கே.வி.விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே ஆகியோரை இன்று (08/07/2022) மாலை 04.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேசவிருப்பதாக தகவல் கூறுகின்றன. அப்போது அவர்களுக்கு பிரதமர் தேநீர் விருந்தும் அளிக்க உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் நமக்கு தெரிவிக்கின்றன.