இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஒரேநாளில் 2,47,417 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 236 நாட்களில் இல்லாத அளவாக தினசரி கரோனா பாதிப்பு இன்று (13/01/2022) உயர்ந்துள்ளது. அதேபோல், ஒமிக்ரான் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 5,488 ஆக அதிகரித்துள்ளது; ஒரேநாளில் 620 பேருக்கு ஒமிக்ரான் நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி மூலம் இன்று (13/01/2022) மாலை 04.45 மணிக்கு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன ஆலோசனை நடத்தினார். பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தடுப்பூசிப் போடும் பணிகளை விரைவுப்படுத்துவது, முன்களப் பணியாளர்கள், 60- வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசியை விரைந்து செலுத்துவது, மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைக் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மனசுக் மாண்டவியா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் காணொளி மூலம் கலந்துக் கொண்டனர். அதேபோல், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. உள்ளிட்டோர் காணொளி மூலம் கலந்து கொண்டனர்.