18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் கடந்த 26 ஆம் தேதி (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 27 ஆம் தேதி (27.06.2024) உரையாற்றினார். இதனையொட்டி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, திமுக எம்.பி. ஆ.ராசா எனப் பலரும் உரையாற்றினார்.
இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (02.07.2024) பதில் அளித்துப் பேசி வருகிறார். அப்போது அவர் பேசுகையில், “உலகின் மிகப்பெரிய தேர்தல் பிரசாரத்தில் பொதுமக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர், சிலரது வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பொய்களைப் பரப்பிய போதும் பெரும் தோல்வியைச் சந்தித்தனர். மக்களவைத் தேர்தலில் மீண்டும் எங்களைத் தேர்வு செய்த மக்களுக்கு நன்றி. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவது அவர்களது பதற்றத்தை வெளிப்படுத்துகிறது.
நேற்றும் இன்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரின் உரை குறித்து தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களாக முதன்முறையாக வந்தவர்கள் பாராளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் பின்பற்றினர். அவர்களின் நடத்தை அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரைப் போல இருந்தது. அவர்கள் முதல் முறையாக இருந்தபோதிலும், அவர்கள் சபையின் கண்ணியத்தை உயர்த்தியுள்ளனர். அவர்களின் கருத்துக்களால் இந்த விவாதத்தை மிகவும் மதிப்புமிக்கதாக ஆக்கியுள்ளனர்.
ஊழலுக்கு எதிரான நமது பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கைக்காக நாடு நம்மை ஆசீர்வதித்துள்ளது. இன்று இந்தியாவின் நம்பகத்தன்மை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. எங்கள் ஒவ்வொரு கொள்கையின் ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு செயலின் ஒரே நோக்கம் இந்தியாவே முதன்மையானது என்பதாகும்” எனப் பேசினார். இதற்கிடையே மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றிய போது மணிப்பூர், நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர்.