கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று (27-02-24) காலை கேரளா சென்றார். அதனையடுத்து, அவர் அங்குள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்குச் சென்று ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை ஆய்வு செய்தார். அவருடன், கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இருந்தனர்.
இதனையடுத்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்களைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷுசுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு மிஷன் லோகா பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “தேர்ந்தெடுக்கப்பட்ட 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள் தான்” என்று கூறினார்.