
இன்று ஒரு நாள் பயணமாக கர்நாடகா வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு ரூ.10,800 கோடி மதிப்பிலான திட்டங்களைத் துவக்கி வைக்கிறார்.
கர்நாடகாவில் யாத்கிரி மற்றும் கல்புர்கி மாவட்டங்களுக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்கிறார். இதற்காக காலை 11 மணிக்கு கல்புர்கி நகருக்கு விமானம் மூலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் யாத்கிரி மாவட்டம் கொடேகல் கிராமம் செல்கிறார்.
கொடேகல் கிராமத்தில் நடைபெறும் விழாவில் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் போன்றவற்றிற்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார். அக்கிராமத்தில் லம்பானி மக்கள் வசிக்கும் தண்டா பகுதிகளை வருவாய் கிராமங்களாக அறிவித்து அக்கிராமத்தினை சேர்ந்த மக்களுக்கு வீட்டுப் பத்திரங்களை வழங்குகிறார்.
கர்நாடகா மாநிலத்தின் பயணத்தை முடித்துக் கொண்டு மகாராஷ்டிரா செல்லும் மோடி அங்கு 38,800 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.