முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சார்பில் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும், அவருக்கு அளிக்கப்பட்ட மருந்தால் திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், அதுகுறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருவதாக நேற்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மன்மோகன் சிங்கிற்கு நேற்று கரோனா பரிசோதனை செய்துள்ளனர் மருத்துவர்கள். நேற்று பிற்பகலுக்குப் பின் மன்மோகன் சிங்கிற்கு காய்ச்சல் குறைந்து, உடல்நலம் தேறிய நிலையில், மாலையில் வந்த பரிசோதனை முடிவுகளின்படி மன்மோகன் சிங்கிற்கு கரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மன்மோகன் சிங் இன்று மதியம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.