மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஆறாம் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (25-05-24) 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-05-24) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில், ஹரியானா மாநிலம் பிவானி பகுதியில் இன்று (23-05-24) பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், “மேற்கு வங்கத்தில் ஓபிசி சான்றிதழ்களை ஒரே இரவில் இஸ்லாமியர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் வழங்கியுள்ளனர். கடந்த 10-12 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து ஓபிசி சான்றிதழ்களையும் உயர்நீதிமன்றம் செல்லாததாக்கியுள்ளது.
1962 இல், நேருவால், சீனாவின் கைகளில் அடிபட்டோம். ஆனால், காங்கிரஸ் அந்தத் தோல்விக்கு நமது ராணுவத்தையே காரணம் என்று கூறினார்கள். அந்தக் குடும்பம் இன்றும் நமது ராணுவத்தை இழிவுபடுத்த வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறது. மேலும் பழிவாங்கும் எண்ணத்தில் ரூ.500 வீசி ஒரே பதவி ஒரு ஓய்வூதியம் (OROP) செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.
இந்தியா கூட்டணியின் நோக்கத்தை நாட்டு மக்கள் ஏற்கெனவே புரிந்து கொண்டுள்ளனர். அதுதான் அவர்களின் நிலை. வெறும் 5 கட்டங்களிலேயே இந்தியக் கூட்டணியின் முருங்கை வெடித்து, மூன்றாம் கட்டத்துக்குப் பிறகு அழுது புலம்ப ஆரம்பித்ததைப் பார்த்திருப்பீர்கள்.ஏன் தேர்தல் ஆணையம் இப்படி செய்கிறது? தேர்தல் ஆணையம் ஏன் இப்படி செய்கிறது? என்று” எனத் தெரிவித்தார்.