தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று (14-11-23) அங்கு பழங்குடியின மக்கள் நிறைந்த ஜபுவா மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதெல்லாம், பழங்குடியினர் மற்றும் பின் தங்கிய பகுதிகளில் பட்டினி நிலை செய்திகள் தான் வெளியாகும். மேலும், உடல் மெலிந்து போன குழந்தைகளின் புகைப்படங்களும் வெளியாகும். உடனே காங்கிரஸ் தலைவர்கள், அவர்களது வீடுகளுக்குச் சென்று அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு அந்த பிரச்சனையை அப்படியே மறந்து விடுவார்கள். காங்கிரஸ் பல்லாண்டு காலமாக பழங்குடியின மக்களை ஓரங்கட்டியுள்ளனர். இதுதான் அவர்களது மனப்பான்மை.
பழங்குடியின மக்களை காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கிக்காக மட்டும்தான் பார்த்தது. அதனால்தான் பழங்குடியினர் அவர்களை நிராகரித்து விட்டனர். கொள்ளு தாத்தா, பாட்டி, தந்தை உள்ளிட்டோர் (நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி) பழங்குடியினர் மீது பாசத்தை காட்டி நாடகம் ஆடினர். காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடக்கும் தெரியுமா? ஒரு பழங்குடி நபரை அணுகி மத்திய அரசு மூலம் உங்களுக்கு வங்கிக் கடன் அளிக்க திட்டம் உருவாக்கி உள்ளது. அந்த பணத்தை வைத்துக் கொண்டு கோழி வாங்கி, முட்டைகளை வைத்து நீங்கள் சம்பாதிக்கலாம் என்று கூறுவார்கள். உடனே, அந்த நபரும் அவர்கள் வீசிய வலையில் விழுந்து அந்த கடனை பெற்றுக்கொள்வார்கள்.
அதன் பிறகு, அதே நாள் மாலையில் சிவப்பு விளக்கு பொருத்திய ஒரு அரசு வாகனம் அந்த குடிசை முன்பு நிற்கும். மேலும், அதில் இறங்கிய அதிகாரியும், கோழியை பற்றி விசாரித்து இன்று இரவு இங்கேயே தங்கிக் கொள்கிறேன் என்று கேட்பார். அதற்கு அந்த பழங்குடியின நபரும், அதிகாரி சாப்பிடுவதற்கு கோழியை அடித்து சமைத்து போடுவார். ஒரு வாரம் கழித்து, மற்றொரு தலைவரோ அல்லது அதிகாரியோ மீண்டும் அந்த நபரின் வீட்டுக்கு செல்வார்கள். மேலும், 2 கோழிகள் காலி ஆகும். ஆக, ஒரு முட்டை கூட போடாமல் அனைத்து கோழிகளும் கொல்லப்பட்டிருக்கும். இப்படித்தான் பழங்குடியின மக்கள் கடனாளி ஆனார்கள். இதுபோன்ற வஞ்சக விளையாட்டு காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து நடந்தது” என்று கூறினார்.