18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
அண்மையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தரவுகளை தாமதமாக கொடுக்கிறார்கள்; சரியான வகையில் வாக்குப்பதிவு தரவுகள் கொடுக்கப்படவில்லை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து, அடிப்படை ஆதாரமற்ற கருத்துக்களை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாக இந்திய தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் குறித்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கார்கே கருத்து தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு பற்றிய அடிப்படை ஆதாரமற்ற கருத்துக்களை கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. இப்படி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையத்தின் மீது சுமத்துவது மூலம் தேர்தல் நடவடிக்கைக்கு எதிராக மல்லிகார்ஜுன கார்கே செயல்படுகிறார் எனத் தேர்தல் ஆணையம் தற்போது பகிரங்கமாக தனது கண்டனத்தை தெரிவித்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் ஆணையத்துக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “காங்கிரஸ் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு தான் எழுதிய கடிதத்தை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பவில்லை. ஆணையத்தில் கொடுத்த பல புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத ஆணையம், எழுதாத கடிதம் மீது நடவடிக்கை எடுத்தது மிகவும் ஆச்சரியமளிக்கிறது. தேர்தல் ஆணையம் கடிதம் எழுதிய விதத்தில் சில தவறுகள் இருந்தாலும் அதை பெரிதுப்படுத்த விரும்பவில்லை. தேர்தல் ஆணையம் சில அழுத்தம் காரணமாகவே இவ்வாறு செயல்பட்டுள்ளது. மக்கள் கேள்வி எழுப்பும் உரிமையை மதிப்பதாக கூறும் ஆணையம், அதே நேரத்தில் எச்சரிக்கையுடன் செயல்படும்படி ஆலோசனை என்ற பெயரில் மிரட்டப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.