நாடு முழுவதும் நாளை (26 ஆம் தேதி) 74வது குடியரசு தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி நாடு முழுவதும் உள்ள விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி(68) கலந்துகொள்ளவுள்ளார். அது மட்டுமின்றி குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படைப்பிரிவும் கலந்துகொள்கிறது. குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி 3 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். அவருக்கு மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் தலைமையில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று எகிப்து அதிபரும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதையடுத்து குடியரசுத் தலைவர் முர்முவை சந்திக்க இருக்கிறார். நமது நாட்டின் குடியரசு தின விழாவுக்கு எகிப்து அதிபர் ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.