இறந்த பெண்ணுக்கு உயிர் தருவதாகக் கூறி 45 நாட்கள் தனி அறையில் பூட்டிவைத்த மந்திரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது சவாய் மதாப்பூர் மாவட்டம். இங்கு வசித்து வந்த அனிதா எனும் பெண், கடந்த ஜனவரி மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது பெற்றோர் கஜேந்திர சிங் என்ற மந்திரவாதியிடம் அனிதாவை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அனிதாவின் உடலில் பேய் இருப்பதாகக் கூறிய கஜேந்திர சிங், அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவிடாமல் தடுத்துள்ளார்.
இந்நிலையில், ஜனவரி 14ஆம் தேதி அனிதா சுயநினைவை இழந்த நிலையில், கஜேந்திர சிங் உட்பட ஐந்து மந்திரவாதிகள் சேர்ந்து அவரை ஒரு தனியறையில் போட்டு பூட்டியுள்ளனர். மேலும், அனிதா பூரண குணமடைந்து எழுந்து நடப்பார் எனவும் வாக்குறிதி அளித்துள்ளனர். அதேசமயம், இந்தத் தகவலை யாரிடமும் சொல்லாமல் இருக்கவேண்டும் எனக்கூறி, அனிதாவின் பெற்றோரையும் வீட்டை விட்டு வெளியே அனுமதிக்காமல் இருந்துள்ளனர்.
எப்போதும் பூஜைப்பொருட்களின் மணத்தால் அழுகிய உடலில் இருந்து வரும் மணம் மறைக்கப்பட்டாலும், ஒரு நாள் அனிதாவின் சகோதரி துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து பக்கத்து ஊரில் உள்ள தனது அண்ணன் ஷியாமுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஷியாம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், கஜேந்திர சிங் தவிர மற்ற மந்திரவாதிகளைக் கைது செய்யப்பட்டுள்ளனர். அனிதாவின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. தப்பியோடிய கஜேந்திர சிங்கை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.