2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி ரூ. 500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பின் மக்கள் அதிகளவில் ரொக்கம் அற்ற வர்த்தகத்தை நோக்கி நகர்ந்தனர். இதனால் அதிகளவில் மொபைல் வாலெட் பயன்பாடு அதிகமானது.
மொபைல் வாலெட் ஆப்களை டவுன்லோட் செய்து, வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக்கணக்கை அந்த ஆப்களில் இணைத்துவிட்டால், எளிதாக பண பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். ஆனால், இது போன்ற ஆப்களினால் வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் தகவல்கள் திருடுபோக வாய்ப்பு உள்ளதால், இந்த சேவைகளை முறைப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி விதிமுறைகளை கொண்டுவந்தது.
இந்நிலையில் ‘AnyDesk' எனும் ஆப் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருக்கும் பணம் மற்றும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆப்-ல் UPI எனும் வசதி மூலம் சில மோசடி பரிவர்த்தனை நடைபெறுவதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
பொதுவாக எந்த ஆப் டவுன்லோட் செய்தாலும் அதனை பயன்படுத்துவதற்கு முன் இறுதியாக அந்த நிறுவனத்தின் சட்டத்திட்டங்களுக்கு உட்படுகிறீர்களா என்று அனுமதி கேட்கும், அதற்கு சம்மதம் தெரிவித்து அந்த ஆப்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவார்கள்.
அதேபோல் இந்த ஆப்பிற்கும் சம்மதம் தெரிவித்ததும் 9 இலக்கு கொண்ட எண் டவுன்லோட் செய்த மொபைலுக்கு வரும். சைபர் கிரிமினல்கள், அந்த எண்ணை வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி பெற்று விடுவார்கள். அந்த நம்பரை பெற்றுவிட்டால், வாடிக்கையாளர்களின் மொபைல் செயல்பாடு ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும். அதன்பின் வாடிக்கையாளர்களின் பணம் முழுவதும் அவர்களின் அனுமதியோடே திருடப்படும் அபாயம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கைவிடுத்துள்ளது.