உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 30க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், ராமர் கோவில் திறப்பு நாளான ஜனவரி 22 ஆம் தேதி அன்று குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 15 அறுவை சிகிச்சைகள் மட்டுமே செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கர்ப்பிணிப் பெண்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஜனவரி 22 ஆம் தேதி நாள் ஒன்றுக்கு 25 கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றது.
குறிப்பிட்ட நாளில் குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் சுகப் பிரசவம் ஏற்படுவதில் கடினம் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கிய போதும், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள பலர் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.