தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்கள் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு கடந்த 18ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது என 21ம் தேதி தெரிவித்தது. இதனால், கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்துவிட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக அரசைக் கண்டித்து அந்த மாநிலத்தில் கர்நாடக அமைப்புகள், விவசாயிகள் மற்றும் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று மண்டியா, அத்திப்பள்ளி டோல்கேட், கிருஷ்ணராஜபுரம், மைசூரு வங்கி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் வாழும் பகுதிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நேற்று போராட்டம் நடந்ததைத் தொடர்ந்து இன்று மாண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். மாண்டியா மட்டுமின்றி சாம்ராஜ்நகரா, ராமநகரா, பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கன்னட அமைப்புகளும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாண்டியாவில் நடக்கும் போராட்டத்திற்கு பா.ஜ.க. தலைவர் சி.டி. ரவி வந்து கலந்துகொண்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது; “விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வந்துள்ளோம். இந்தியா கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ் தண்ணீரை திறந்துவிடுகிறது. கூட்டணியை பாதுகாக்கவே தமிழ்நாட்டிற்கு காங்கிரஸ் தண்ணீர் திறந்துவிடுகிறது” என்று பேசினார்.