குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆகும். அந்த மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர், சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றனர். இதனால் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அதனைத் தொடர்ந்து குஜராத்தில் மாநிலத்தில் இரு மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் மாநிலங்களவை தேர்தலுக்கான தேதியையும் அறிவித்துள்ளது. ராஜ்ய சபா இடைத்தேர்தல் நாளை (ஜூலை 5) காலை 09.00 மணிக்கு தொடங்கி மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ளது. அதே போல் பதிவான வாக்குகள் அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குஜராத் மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 182 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 175 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதியானவர்கள் ஆவர். பாஜக கட்சி 100 உறுப்பினர்களையும், காங்கிரஸ் கட்சி 71 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. பாஜக கட்சி சார்பில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட இரு வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் சந்திரிகா சுதாசமா மற்றும் கவுரவ் பாண்ட்யா ஆகியோர் ராஜ்ய சபா தேர்தல் களத்தில் உள்ளன. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்நதெடுக்க 88 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்ய சபா தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சுமார் 70 எம்.எல்.ஏக்கள் நேற்று இரவு சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று இரவு வரை விடுதியில் தங்கியிருந்து, நாளை காலை சொகுசு விடுதியில் இருந்து புறப்படும் எம்.எல்ஏக்கள் தேர்தல் நடைபெறவுள்ள, குஜராத் சட்டமன்ற வளாகத்திற்கு வரவுள்ளனர். ராஜ்ய சபா தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017- ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலில் குஜராத் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.