பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி பிரக்யா தாகூர். இவர் மலேகான் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருபவர்.
இந்தநிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில், சத்திரிய மகா சபை என்ற அமைப்பின் கூட்டத்தில், இவர் பேசிய ஜாதிய அடைப்படையிலானா பேச்சு தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அக்கூட்டத்தில் அவர், நமது சமூகம் தர்ம சாஸ்திரத்தில், நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், ”நீங்கள் ஒரு சத்திரியனை ஒரு சத்திரியன் என்று அழைத்தால், அவர்கள் மோசமாக உணர்வதில்லை; ஒரு பிராமணரை பிராமணர் என்று அழைத்தால் அவர்கள் மோசமாக உணர்வதில்லை; ஒரு வைசியரை வைசியர் என்று அழைத்தால், அவர்கள் மோசமாக உணர்வதில்லை. ஆனால் நீங்கள் ஒரு சூத்திரரை சூத்திரர் என்று அழைத்தால், அவர்கள் மோசமாக உணர்கிறார்கள். இது ஏன்? அறியாமை காரணமாக, அவர்களால் இதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், ”வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வருபவர்களை தேச விரோதிகள் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர், “விவசாயிகள் என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் தேசவிரோதிகள். அவர்கள் விவசாயிகள் அல்ல. காங்கிரஸ்காரர்களும் இடதுசாரிகளும் விவசாயிகளின் உடையில் இருந்துகொண்டு, ஷாஹீன் பாக் போராட்டத்தின் போது செய்ததை போலவே இப்போதும் நாட்டிற்கு எதிராகக் குரல் எழுப்புவதோடு தவறான தகவல்களையும் பரப்பி வருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.