உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து புதுச்சேரி அரசு, சிறை கைதிகளுக்குப் பரோல் விடுப்பும், பிணையும் வழங்க வேண்டுமென சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு. அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் தலைவர் இரா. மங்கையர்செல்வம், தமிழர் களம் செயலாளர் கோ. அழகர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர்படை தலைவர் பாவாடைராயர் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது,
“கரோனா நோய்த்தொற்று சமூகப் பரவலாகி, இந்திய அளவில் மிக பாதிப்பு உள்ள மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது. இதனால் மக்களின் சராசரி வாழ்க்கை சீர்குலைந்துள்ளது. இதன் கோரப்பிடியில் சிக்கி பொதுமக்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், சிறைத்துறையினர், சிறைக்கைதிகள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் 70க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகளும், 150க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகளும் சிறைவாசிகளாக உள்ளனர். கரோனா பெரும்தொற்று காரணமாக 90 சிறை கைதிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.
புதுச்சேரியில் இப்பொது 21% அடிப்படையில் அதிவேகமாக கரோனா பரவுவதாக தகவல் அறிகிறோம். சிறைக் கைதிகள் சிறையில் பாதுகாப்பாக இருந்தாலும், சிறைக்காவலர்கள் வெளியே வந்துசெல்வதால் சிறைக்குள் கரோனா தொற்று எளிதில் பரவ வாய்ப்புள்ளது. இது ஒருபுறம் இருக்க, சிறைக் கைதிகளுக்கு எதிர்ப்பு சக்தி நிறைந்த சரியான உணவும் கொடுக்கப்படுவதில்லை. கரோனாவைக் கட்டுப்படுத்தக்கூடிய உபகரண வசதிகளும் அங்கே போதிய அளவில் இல்லை. இதனைக் கருத்தில்கொண்ட உச்ச நீதிமன்றம், சிறைக் கைதிகளுக்குப் பரோல் விடுப்பு மற்றும் பிணையில் வெளியே விடவும் பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலையில் சரியான மருத்துவ வசதிகள் இல்லாமலும், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் கரோனா தொற்று காரணமாக உயிர் அச்சத்தில் சிறைக்கைதிகள் வாழ்ந்து வருகின்றனர்.
'குற்றத்தை வெறுக்க வேண்டுமே தவிர, குற்றவாளிகளை அல்ல' என்ற அடிப்படையில், புதுவை அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள கைதிகளின் நன்னடத்தை பொருட்டு தண்டனைக் கைதிகளுக்குப் பரோல் விடுப்பும், விசாரணைக் கைதிகளுக்குப் பிணையும் கொடுத்து இந்த அரசு மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.