புதுச்சேரி ஆர்.வி.நகர் மொட்ட தோப்பு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(33). சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்தி இருந்தார். இன்று காலை பார்த்த போது அந்த ஆட்டோவை காணவில்லை. இதுகுறித்து அவர் கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் சித்தன்குடி பகுதியில் ஸ்ரீ கதிர் முத்துமாரியம்மன் கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த குரு தட்சிணாமூர்த்திசாமி கோவில் கோபுரத்தில் இருந்த 3 கலசத்தை திருடினர்.
அங்கு உண்டியலை உடைக்கும் சத்தத்தைக் கேட்டவுடன் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் கொள்ளையர்கள் அங்கிருந்த கலசத்தை திருடிகொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி கீர்த்தி கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இரு புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், திருமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து கோரிமேடு போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சின்னையன் பேட்டை பகுதியில் அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த ஆட்டோவை சோதனை செய்தபோது அவன் ஓட்டிவந்தது அய்யப்பனுடைய ஆட்டோ என்பது தெரியவந்தது. அவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் ஆர்.வி.நகர் மொட்டத்தோப்பு அரசு குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுகுமார்(27) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் ஆட்டோவை திருடி சாரம் வேலன் நகர் நேதாஜி தெருவை சேர்ந்த 15 வயது சிறுவனுடன் சேர்ந்து சித்தன்குடி கருமுத்து மாரியம்மன் கோவில் கலசங்களை திருடியதை ஒப்புக்கொண்டான். இதையடுத்து அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் 15- வயது சிறுவனையும், அவர்கள் கொள்ளையடித்த 3 கலசங்களையும், இரும்பு ராடு ஒன்று மற்றும் 2 லட்சம் மதிப்பிலான ஆட்டோவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் சிறுவனை அரியாங்குப்பம் சீர்திருத்தப் பள்ளியிலும், சுகுமாரனை காலாப்பட்டு ஜெயிலிலும் அடைத்தனர். மதியம் 11.00 மணிக்கு கொடுத்த புகாரை போலீசார் விரைந்து செயல்பட்டு, திருடுபோன ஆட்டோ மற்றும் கோவில் கலசங்களை திருடிய கொள்ளையர்களை சில மணி நேரத்தில் பிடித்த கோரிமேடு போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர். கைது செய்யப்பட்ட சுகுமார் மீது 2 கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.