உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு பிரபலங்கள், பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் பாஜக, ராமர் கோவிலை அயோத்தியில் கட்டி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தது. 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் பாஜக ராமர் கோவில் விவகாரத்தை வைத்து பிரச்சாரம் நடத்தி இருந்தது.
தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிற நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. கோவில் வேலைகள் முழுமையாக முற்றுபெறாத நிலையில் பாஜக அரசு தேர்தலை காரணம் காட்டி முன்கூட்டியே கோவிலை திறப்பதாகவும், இது அரசியல் செயல்திட்டம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளன.
காங்கிரஸ் ராமர் கோவில் விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பை நிராகரித்துள்ளது. இந்நிலையில் எஞ்சிய பணிகள் விரைவில் முடியும் என பாஜக ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் பல சங்கராச்சாரியார்களும் குடமுழுக்கை எதிர்ப்பதால் அயோத்தியில் பரபரப்பு நிலவியுள்ளது. மேலும் நாங்கள் ராமர் கோவில் கட்டுவதை எதிர்க்கவில்லை. இந்த நேரத்தில் இங்கு கும்பாபிஷேகம் நடப்பதைத்தான் எதிர்கிறோம் என அயோத்தியை சார்ந்த சில தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதில் கரசேகவராக இருந்து போலீசார் துப்பாக்கி சூட்டில் முதுகில் குண்டடிபட்ட சினில்குமார் கூறும்போது, ''நாங்கள் மட்டுமல்ல பல சங்கராச்சாரியார்களும் வருகின்ற 22 ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த கும்பாபிஷேகத்தை ஏற்கவில்லை. நானும் அயோத்திவாசிதான். 1992 ஆம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்ட போது நானும் சென்றேன். போலீஸ் சுட்டதில் என் மீது குண்டு பாய்ந்தது. நாங்கள் மட்டுமல்ல ஏராளமான சங்கராச்சாரியார்களும் 28 ஆம் தேதி நடக்கும் கும்பாபிஷேகத்தை ஆதரிக்கவில்லை'' என்றார்.