உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.
ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்கு போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத்தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்துள்ளன.
உயிரிழந்த இளம்பெண்ணின் சடலத்தை போலீஸாரே இரவு நேரத்தில் தகனம் செய்ததாக கூறப்படுவது, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது, பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என போலீஸார் தெரிவித்தது என அடுத்தடுத்து இந்த விவகாரத்தை சர்ச்சைகள் சூழ்ந்தன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரைன், ககோலி ஹோஷ் தஸ்திதார், பிரதிமா மொண்டல் ஆகியோர் நேரில் சென்றபோது ஹத்ராஸ் எல்லையில் அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், டெரிக் ஓ பிரைன் போலீஸாரால் கீழே தள்ளிவிடப்பட்டார்.
அப்போது, எதற்காக தடுத்து நிறுத்துகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பிய எம்.பி., பிரதிமா மொண்டல் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும், அவர் கீழே விழுந்ததும் ஆண் போலீஸார் அவரை தொட்டதாகவும் முன்னாள் எம்.பி., மமதா தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். இப்படி பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில், இந்த வழக்கு தொடர்பாக காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்ட விசாரணை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பணியிடைநீக்கம் செய்யப்படும் எஸ்.பி. மற்றும் டிஎஸ்பிக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.