புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் இணை பொறுப்பாளர் ராஜு சந்திரசேகர் எம்.பி. மற்றும் பா.ஜ.க.வின் மாநிலப் பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் ஆகியோர், கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியில், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாதது மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் செய்த ஊழல்கள் குறித்த தகவல்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை வெளியிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் கூறியதாவது, "புதுச்சேரியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரஸ் ஆட்சியில் செய்த ஊழல்கள் ஆதாரத்துடன் வெளியிடப்படும். வருகின்ற மார்ச் 24- ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாகவும், புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 30- ஆம் தேதி மாலை 04.00 மணிக்கு ஏ.எப்.டி திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்" இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனிடையே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் சாமிநாதன், "புதுச்சேரியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் 60 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் அளவு, புதுச்சேரி மக்கள் மத்தியில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு பெருகியுள்ளது" எனத் தெரிவித்தார்.