மராத்தா இடஒதுக்கீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு செய்த சட்டத் திருத்தத்தின்படி, ஓபிசி பட்டியலில் சாதிகளை இணைக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இல்லை எனத் தெரிவித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இருப்பினும் உச்சநீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து, ஓபிசி பட்டியலில் சாதிகளை இணைக்கும் அதிகாரத்தை மத்திய அரசு மீண்டும் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கும் சட்டத் திருத்த மசோதா உருவாக்கப்பட்டு, அது ஒன்பதாம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நேற்று இந்த ஓபிசி சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேறியது. அதன்தொடர்ச்சியாக இன்று மாநிலங்களவையிலும் ஓபிசி சட்டத் திருத்த மசோதா நிறைவேறியுள்ளது.
பெகாசஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக அமளியில் ஈடுபட்டு, நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள், இந்த ஓபிசி சட்டத் திருத்த மசோதா நிறைவேற ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.