பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் கட்டப்பட்ட 1.75 லட்சம் வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "அரசின் திட்டங்களால் தங்களுக்கு பலன் கிடைக்கும் எனக் கோடிக்கணக்கான இந்தியர்கள் நம்புகின்றனர். பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வெளிப்படைத்தன்மையுடன் வீடு வழங்கப்படுகிறது. பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், மத்திய பிரதேசம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரூபாய் 23,000 கோடி மதிப்பிலான பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், உஜ்வாலா, சௌபாக்யா போன்ற பல்வேறு திட்டங்கள் ஏழைகளின் இல்லங்களோடு இணைந்து, வலிமையோடு அவர்களின் கனவுகளை நனவாக்கி உள்ளன.
பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கழிவறைகள் கட்டுவது ஆகட்டும் அல்லது தூய்மை இந்தியா திட்டம் ஆகட்டும், இவையெல்லாம் ஏழைகளுக்கு வசதிகளை அளிப்பதோடு வேலைவாய்ப்பையும் அதிகாரத்தையும் வழங்குகின்றன. குறிப்பாக, கிராமப்புற பெண்களின் வாழ்வில் மாற்றுவதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன." இவ்வாறு பிரதமர் பேசினார்.
2022- க்குள் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் இதுவரை 1.14 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும் 17 லட்சம் ஏழை குடும்பங்கள் பயனடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.