ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க உட்பட அனைத்துக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலம் என 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று (03-10-23) தெலுங்கானா, நிஜாமாபாத்தில் பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மோடி, “ இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கூறுகிறது. மேலும், அந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் அதிகளவில் உள்ள சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கூறுகிறது.
தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இந்து கோவிலை தமிழக அரசு வலுக்கட்டாயமாக தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இதன் மூலம், இந்து கோவில்களின் சொத்துக்களையும் வருமானங்களையும் முறைகேடாக பயன்படுத்தி வருகிறது. இந்து கோவிலை தன் கட்டுக்குள் வைத்திருப்பது போல், சிறுபான்மையினருக்கு சொந்தமான வழிபாட்டு தலங்களை தங்களுடைய கட்டுக்குள் தமிழக அரசு கொண்டு வருமா?
சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராத போது இந்து கோவில்களை மட்டும் எப்படி கொண்டு வர முடியும்?. மக்கள் தொகைக்கு ஏற்ப உரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறுகிறது. அப்படியென்றால், பெரும்பான்மை இந்துக்களுடைய கோவில்களை அவர்களிடம் அளித்து அவர்களுடைய உரிமையை நிலைநாட்ட முடியுமா?” என்று கூறினார்.