Skip to main content

“நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தை சர்ச்சையாக்கக் கூடாது” - பிரதமர் மோடி

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
 PM Modi says Should not make the issue of parliamentary encroachment a controversy

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது எனப் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.  

அதேபோல், நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசி அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோடியவர்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற அத்துமீறல் கவலையளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “நாடாளுமன்ற அத்துமீறல் தீவிரமான பிரச்சனை. இது மனவேதனையும் கவலையும் அளிப்பதாக உள்ளது. இந்த சம்பவத்துக்கு பின்னால் இருப்பவர்கள் யார், அவர்களுடைய நோக்கம் என்ன என்பதை கண்டறிய வேண்டும். அதே நேரம் இந்த விவகாரத்தை சர்ச்சையாக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இது தொடர்பாக, விசாரணை அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்