Skip to main content

கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம் - கேரளா உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

pm modi

 

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்குப் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் கேரளாவைச் சேர்ந்த பீட்டர் என்பவர், பிரதமர் மோடியின் புகைப்படமின்றி தடுப்பூசி சான்றிதழை வழங்க வேண்டும் எனக் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அவர் தனது மனுவில், தடுப்பூசி சான்றிதழை வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருப்பதாகவும், அதில் பிரதமரின் புகைப்படம் இருப்பதற்கு எந்த அர்த்தமோ, பயனோ இல்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "அரசு உறுதியாக இருந்தால், எந்த புகைப்படமும் இன்றி சான்றிதழைப் பெற மக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் விளம்பரமாகவும், ஊடகப் பிரச்சாரமாகவும் மாற்றப்படுகிறது. மேலும் இது தனி மனிதனின் சாதனை என்ற தோற்றத்தை உருவாக்குகிறது.பிரதமரின் புகைப்படம் இன்றி சான்றிதழைப் பெற எனக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. பிரதமரின் புகைப்படம், ஒரு நபரின் தனிப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்படும் தேவையில்லாத ஊடுருவல். மத்திய அரசோ, பிரதமரோ குறிப்பாக எதையும் செய்ததாகக் கூற முடியாது. அவர்கள் தங்கள் கடமையைத்தான் செய்தார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் அமெரிக்கா, இந்தோனேசியா, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்களைச் சமர்ப்பித்த பீட்டர், அந்தந்த நாடுகளின் தலைவரின் புகைப்படங்கள் தடுப்பூசி சான்றிதழில் இடம்பெறவில்லை என்றும், தேவையான தகவல்களே இடம்பெற்றுள்ளன என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக தங்களது கருத்துக்களை இரண்டு வாரத்தில் பதிவு செய்யுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்