
தலைநகர் டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் ‘மதராசி குடியிருப்பு’ அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில், 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மேம்பாலம் கட்டுவதற்காக இந்த பகுதியை அகற்ற டெல்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனால், அப்பகுதியில் வாழும் தமிழர்களை 50 கி.மீ தூரத்திற்கு தள்ளி உள்ள மாற்று இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அந்த மாற்று இடத்தில் பள்ளிகள், ரேஷன் வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும் என்று அங்குள்ள தமிழர்கள் மாநில அரசுக்கு எதிராக ஒரு மாதத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி காந்தி சமாதியில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி நேற்று (22-04-25) தமிழ் மக்கள் பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், பேரணியாக சென்ற தமிழர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வாகனத்தில் அழைத்துச் சென்றனர். டெல்லியில் தங்கள் நிலத்திற்கு போராடும் தமிழ் மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.