மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரி (வயது 72) வயது முதிர்வு காரணமாக நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் தான் கடந்த 19ஆம் தேதி நிமோனியா காய்ச்சலுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து இவர் சிகிச்சை பலனின்றி இன்று (12.09.2024) மாலை 03:05 மணிக்கு காலமானார். அதே சமயம் மருத்துவ மாணவர்களின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தானமாக வழங்க உள்ளனர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையகமான கோல் மார்க்கெட்டில் உள்ள ஏகே கோபாலன் பவனில் நாளை மறுநாள் (14.09.2024) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சீதாராம் யெச்சூரியின் உடல் வைக்கப்படும். இதையடுத்து சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவரது விருப்பப்படி மருத்துவ ஆராய்ச்சிக்காகத் தானமாக வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரமர் மோடி, சீதாராம் யெச்சூரியுடன் இருக்கும் புகைப்படத்துடன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “சீதாராம் யெச்சூரியின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் இடதுசாரிகளின் கலங்கரை விளக்கமாக இருந்தார். அரசியல் அலைக்கற்றை முழுவதும் இணைக்கும் திறனுக்காக அறியப்பட்டார். அவர் திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தார். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் கட்சியினருடனும் உள்ளன”எனத் தெரிவித்துள்ளார்.