மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி (08.08.2024) பணியில் இருந்துள்ளார். அச்சமயத்தில் அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
அதே சமயம் மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து மேற்கு வங்க ஆளும் அரசான மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இதனையடுத்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்று (03.09.2024) சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திர, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கு இரண்டாவது முறையாக இன்று (04.09.2024) கடிதம் எழுதியுள்ளார். அதில், “மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள், மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். புறநோயளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட அரங்குகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
மருத்துவமனை வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனைக்கு வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் குறித்த பின்னணியை காவல்துறையினர் ஆராய வேண்டும். இதனை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.