Skip to main content

சாலையை மறித்த போராட்டக்காரர்கள்: திரும்பி சென்ற பிரதமர் மோடி - பஞ்சாபில் பெரும் பரபரப்பு!

Published on 05/01/2022 | Edited on 05/01/2022
pm modi CONVOY

 

பிரதமர் நரேந்திர மோடி, இன்று பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூரில் 42 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, அங்கு நடைபெறும் பேரணியில் உரையாற்றுவதாக இருந்தது. இந்தநிலையில் பஞ்சாப் வந்த பிரதமர் மோடி, போராட்டகாரர்கள் சாலையை மறித்ததால் தான் பங்கேற்க நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பியுள்ளார்.

 

பிரதமர் தனது நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்வதற்காக இன்று காலை பிரதமர் பதிண்டாவில் தரையிறங்கினார். மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தார். வானிலை சீரடையாததால், அவர் சாலை வழியாக தேசிய தியாகிகள் நினைவிடத்திற்குச் செல்வார் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு 2 மணி நேரத்திற்கும் மேலாகும். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை பஞ்சாப் போலீஸ் டிஜிபி உறுதிப்படுத்திய பின்னர் அவர் சாலை வழியாக பயணம் மேற்கொண்டார்.

 

ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில், பிரதமரின் கான்வாய் மேம்பாலத்தை அடைந்தபோது, சில போராட்டக்காரர்களால் சாலை மறிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பிரதமர் 15-20 நிமிடங்கள் மேம்பாலத்தில் சிக்கிக் கொண்டார். இது பிரதமரின் பாதுகாப்பில் பெரும் குளறுபடியாகும். பிரதமரின் நிகழ்ச்சி அட்டவணை மற்றும் பயணத் திட்டம் பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. நடைமுறையின்படி, அவர்கள் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகளை தயாராக வைத்திருந்திருக்க வேண்டும். மாற்று திட்டத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

 

மேலும் மாற்று திட்டத்தின்படி, பஞ்சாப் அரசு, சாலை வழியாக எந்தவொரு பயணத்தையும் பாதுகாக்க கூடுதல் பாதுகாப்பை செய்திருக்க வேண்டும். ஆனால் அது செய்யப்படவில்லை. இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு பிறகு, மீண்டும் பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பி செல்ல முடிவு செய்யப்பட்டது. உள்துறை அமைச்சகம் இந்த கடுமையான பாதுகாப்பு குறைபாடு குறித்து மாநில அரசிடம் இருந்து விரிவான அறிக்கையை கேட்டுள்ளது. இந்த தவறுக்கு மாநில அரசு பொறுப்பேற்று கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்