கர்நாடகாவில் ரோட் ஷோ பிரச்சாரத்தில் இருந்த பிரதமரிடம், 5 அடுக்கு பாதுகாப்பை மீறி இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்த சம்பவம் பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக அரசு தங்களுடைய ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதே சமயம், எதிர்க்கட்சியாக இருக்கும் தேசிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற பல யூகங்களை வகுத்து வருகிறது. இதனால் கர்நாடக அரசியலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
மேலும், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கர்நாடகாவிற்குச் சென்றுள்ளார். அப்போது, ஹப்பாள்ளி பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் ROAD SHOW நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட மோடி, காரில் நின்றபடி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சாலை மார்க்கமாக சென்றுகொண்டிருந்தார். அதே சமயம் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக ஏராளமான பாஜக தொண்டர்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தனர். பிரதமரும், அங்கு கூடியிருந்த பொதுமக்களைப் பார்த்து கைகளை அசைத்துக்கொண்டே சென்றார்.
இந்நிலையில், பிரதமரைச் சுற்றி எப்போதும் எஸ்பிஜி எனப்படும் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் இருப்பார்கள். பிரதமர் மோடி எந்த இடத்திற்குச் செல்கிறாரோ அந்த இடம் முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த சூழ்நிலையில், எஸ்பிஜி பாதுகாப்பு வளையத்தை மீறி கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் கையில் மாலையுடன் திடீரென பிரதமர் மோடிக்கு அருகில் வந்துவிட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறப்புப் பாதுகாப்புப் படையினர், உடனே அந்த இளைஞரை தடுத்து நிறுத்தினர். இருப்பினும், அதற்குள் பிரதமர் மோடி அவரிடம் இருந்த மாலையை வாங்கிக் கொண்டார். பிரதமர் எந்த இடத்திற்குச் சென்றாலும், அவருக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். இருப்பினும், அதையும் தாண்டி அந்த இளைஞர் பிரதமர் மோடிக்கு மிக அருகே வந்துள்ளார். இதை பிடித்துக்கொண்ட எதிர்க்கட்சிகள், பாஜக ஆளும் மாநிலத்திலேயே பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்துள்ளதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் மோடிக்கு மாலை அணிவிக்க வந்த இளைஞரைப் பிடித்து கர்நாடக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிவாஜி