உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார்.
ரூர்க்கி பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயம் அடைந்துள்ளார். உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு காரில் திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்தன.
ரிஷப் பண்ட் வந்த கார் தீப்பிடித்து முற்றிலுமாக சேதம் அடைந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயங்களுடன் நின்று கொண்டிருந்த ரிஷப் பண்டை மீட்டனர். முதலில் பண்ட்க்கு ரூர்க்கி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரிஷப் பண்ட் தூக்கக் கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதாலே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரிஷப் பண்ட் அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டார் என்றும் அவருக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் ரிஷப் பண்டிற்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் மூளை மற்றும் தண்டுவடத்தில் எந்த பாதிப்புல் இல்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.