சுதந்திர தினத்தன்று டெல்லியில் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. புர்ஹான் வானி உள்ளிட்ட ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத இயக்க கமேண்டோக்கள் கொல்லப்பட்டதுக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் புதுடெல்லியில் உள்ள நகரத்தின் முக்கிய இடங்களில் நடக்கவிருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் மற்றும் ராணுவத்தினர் தற்பொழுதே பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
2016-ஆம் ஆண்டு நக்ரோடா ராணுவ முகாம் தாக்குதல் வழக்கில் கைதாகி உள்ள பயங்கரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த தகவல் கிடைத்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்ற ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. பிளம்பர், கார்பென்டர் போன்ற தொழிலாளர்கள் வேடங்களில் நகரத்தின் முக்கிய பகுதிகளில் ஊடுருவ இருக்கிறார்கள் அவர்கள் மூலம் இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடத்தவிருக்கப்படுகிறது என செய்திகள் கிடைத்துள்ளதால் ரயில் நிலையங்கள், விமானநிலையங்கள் போன்ற பொது இடங்களிலும் செங்கோட்டை, முக்கிய அரசு அலுவலகங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போதே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.