கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகப் படிப்பிற்கான பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான கோல்வால்கர், வீர் சாவர்க்கர் மற்றும் தீனதயாள் உபாத்யாயா ஆகியோரது அரசியல் கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதற்கு கேரள மாணவர் அமைப்புகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அரசியல், அறிவியல் பாடத்திட்டத்தைக் காவிமயமாக்கும் செயல் என கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்த கண்ணூர் பல்கலைக்கழக துணை வேந்தர், “கண்ணூர் பல்கலைக்கழக அரசியல், அறிவியல் பாடத்திட்டத்தைக் காவிமயமாக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது. பாடத்திட்டத்தை உருவாக்கியவர்கள் பல்வேறு இயக்கங்களின் அடிப்படை கொள்கைகளைப் பாடத்திட்டத்தில் இணைத்துள்ளனர்" என தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க கண்ணூர் பல்கலைக்கழகம், இரண்டு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்தநிலையில், பாடத்திட்ட சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், சுதந்திர போராட்டத்திற்கு முதுகை காட்டியவர்களைப் பெருமைப்படுத்தும் வழக்கம் தங்களிடம் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கமளித்துள்ளார். உயர்கல்வி அமைச்சரும் நடவடிக்கை எடுத்துள்ளார். ஒரு சித்தாந்தத்தையும், சுதந்திர போராட்டத்திற்கு முதுகினை காட்டும் சித்தாந்தத்தைக் கொண்ட தலைவர்களையும் பெருமைப்படுத்தும் அணுகுமுறை எங்களிடம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். பல்கலைக்கழகம் ஒரு சரியான நடவடிக்கையை எடுத்துள்ளது. விவகாரத்தை ஆய்வுசெய்ய இரண்டு உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழுவை நியமித்துள்ளது. இந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் தெளிவாக தெரிவித்துள்ளார்" என கூறியுள்ளார்.